லண்டன்:

மிழகத்தில் ஏர்ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என லண்டனில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, லண்டனில் 3நாள் முகாமிட்டு உள்ளார். அங்கு செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவை 999 திட்டத்தையும் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

மேலும், கொசுக்களால் பரவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்துவது, நோய்களை கையாளும் வழிமுறைகளை தமிழகத்தில் செயல்படுத்துவது மற்றும் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ மனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவது ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

இதைத்தொடர்ந்து லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கல்லூரியில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் ஒரு கிளை அமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள். இங்குள்ள மருத்துவ வசதிகளை தமிழக மக்களுக்கும் கிடைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்ததற்காக தமிழக அரசு, தமிழக மக்களின் சார்பில் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

மேலும், இங்குள்ளது போல, தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த இருப்பதாகவும், இதன்  மூலம் நோயாளிகளை குறித்த நேரத்தில் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியவர், விரைவில், தமிழகத்தில் ஏர்ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி கூறினார்.