டில்லி:

ஆன்லைன் மூலம் ராணுவத்தினருக்கு சலுகை விலையில் டிக்கெட் வழங்கும் திட்டத்தை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. இதற்கு பதில், அவர்கள் நேரடியாக சென்று ஆவணங்களை காண்பித்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து 50 சதவீத சலுகையில் விமானத்தில் பயணம் செய்யும் திட்டம் ஏர் இந்தியா செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த சலுகையை சில டிராவல் ஏஜென்ட்கள் தவறாக பயன்படுத்த துவங்கினர்.

இதனை கண்டறிந்த ஏர் இந்தியா இந்த திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 1 முதல் நிறுத்திவிட்டது. இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘இந்த திட்டம் நிறுத்தப்பட்டது உண்மை. இனி மேல் வீரர்கள் ஏர் இந்தியா புக்கிங் மையங்களுக்கு சென்று தங்களது அட்டையை காண்பித்து டிக்கெட் பதிவு செய்யலாம். சில டிராவல் ஏஜென்ட்கள் குறைந்த விலையில் டிக்கெட் பெற வேண்டும் என்பதற்காக போலி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பித்தனர். இது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது’’ என்றார்.

ராணுவ அதிகாரி கூறுகையில், ‘‘ஏர் இந்தியாவில் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்வது கடினமாகியுள்ளது. உலகம் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் ஏர் இந்தியா அதற்கு எதிரான திசையில் செல்கிறது. குழப்பம் ஏற்படுத்துவதை தவிர்த்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்’’ என்றார்.