தனக்கு அபராதம் விதித்ததாக ஏர் இந்தியா மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மும்பை செல்வதற்காக தான் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ஏர் இந்தியா ரத்து செய்ததுடன், 3,000 ரூபாய் அபராதம் விதித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்து அபராதம் விதிப்பதன் மூலம் ஏர் இந்தியா லாபம் ஈட்டுவதாக அவர் புகார் கூறியுள்ளார்.

air

பயணிகள் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்து அபராதம் விதிப்பதை நீண்ட காலமாக ஏர் இந்தியா கடைப்பிடித்து வருகிறது. தற்போது தான் டிக்கெட் ரத்து செய்யாமலேயே அபராதம் விதிக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து சிதம்பரம் தனது டிவிட்டரில், தான் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு அதற்கான அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில், “ நான் சனிக்கிழமை டெல்லியில் இருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானம் 665ல் முன்பதிவு செய்திருந்தேன். டிக்கெட்டும் வழங்கப்பட்டது. ஆனால், ஏர் இந்தியா எனது விமான டிக்கெட்டை இன்று ரத்து செய்து அதற்கான அபராதம் தொகை ரூ.3000 விதித்துள்ளது “ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை அமைச்சர் சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்ஹா மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.

மேலும், ” லாபம் ஈட்டுவதற்காக ஏர் இந்தியா புதிய வழியை கண்டறிந்துள்ளது. உதாரணத்திற்கு 100 விமான டிக்கெட்டுகள் ரத்து செய்தால் ரூ.3 லட்சம் வரை லாபம் கிடைக்கும் “ எனவும் சிதம்பரம் பதிவிட்டுள்ளார். ப.சிதம்பரத்தின் இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அதற்கு அபராதம் விதிப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஒரு விமான டிக்கெட் ரத்து செய்தால் ரூ.3000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகை எரிப்பொருள் மற்றும் அடிப்படை கட்டண செலவிற்காக வசூலிப்படுகிறது. எனினும், ஒருசில விமான நிறுவனங்கள் கோளாறு காரணமாக தாங்களாகவே விமானத்தை ரத்து செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை.