டில்லி

பாலகோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது.   இதில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு பதிலடியாக பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அன்று பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.   இதனால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு மேல் பறக்க அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.  இந்த தடை இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து விமானங்களுக்கும் பொருந்தும்

இந்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா தனது விமான சேவைகளை பாகிஸ்தான் நாட்டுக்கு மேல் செல்லாமல் சுற்று வழியில் செலுத்தி வருகிறது.  அதிக நேரம் பறப்பதால் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு அதிகம் செலவு ஏற்பட்டு வருகிறது.   கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து இதுவரை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளது.    அமைச்சக அதிகாரி விரைவில் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண உள்ளதாக தெரிவித்துள்ளார்.