ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயணிகள் பெருமளவில் வெளியேறி வருவதால் ஏர் இந்திய தனது பயணக்கட்டணத்தை குறைத்துள்ளடு.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் மாநில நிர்வாகம் அமர்நாத் யாத்திரிகர்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பயணிகளையும் அவரவர் இடங்களுக்குத் திரும்பிச் செல்ல வலியுறுத்தியது.   அத்துடன் மாநிலத்தில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.    அங்குள்ள பயணிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

இவ்வாறு வெளியேறுவோர் வசதிக்காக ஏர் இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”காஷ்மீர் மாநில அரசு நிர்வாகம் காஷ்மீர் மாநிலத்திலிருந்து  வெளியேறும்படி கேட்டுக்கொண்டதை அமர்நாத் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டு விமான ஒழுங்குமுறை, சிவில் ஏவியேஷன் இயக்குநரக தலைவர், தேவை ஏற்பட்டால் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து கூடுதல் விமானங்களை இயக்கத் தயாராக இருக்கும்படியும் விமான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  அத்துடன் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பயணிகளுக்கு உதவும் வகையில் பயணச் சீட்டு விலையைக் குறைக்கும்படி விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.

எனவே ஏர் இந்தியா நிர்வாகம் பயணச் சீட்டு விலைக் குறைப்பை இன்றுமுதல் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.   ஸ்ரீநகர்-டெல்லி வழித்தடத்திற்கான அதிகபட்ச கட்டணத்தை ரூ.9,500லிருந்து ரூ.6.715 ஆகவும், டெல்லி-ஸ்ரீநகர் வழித்தடத்திற்கான கட்டணம் ரூ.6,899 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் இந்த  விமானப் பயணச் சீட்டுகளுக்கான கட்டணக் குறைப்புச் சலுகை வரும் ஆகஸ்ட் 15 வரை அமலில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.