ஏர் இந்தியாவை ஒரு இந்திய நிறுவனம் தான் இயக்க வேண்டும்….ஆர்எஸ்எஸ்

மும்பை:

‘‘ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய நிறுவனம் தான் இயக்க வேண்டும்’’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் கூறினார்.

தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கி நடந்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் இதற்கான ஏல நடைமுறையில் இருந்து வெளியேறிவிட்டன.

இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக.வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் கூறுகையில், ‘‘ஏர் இந்தியா நன்றாக செயல்படுகிறதா? இல்லையா? என்ற கேள்வி இல்லை. விற்பனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான உடனேயே ஏர் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. ஏர் இந்தியாவை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் தான் இயக்க வேண்டும்.

ரொக்கமில்லா பரிவர்த்தனையை பெரும்பாலான மக்களால் மேற்கொள்ள முடியவில்லை. உங்களால் வேண்டுமானால் இதை செய்ய முடியும். ஆனால் பெரிய அளவிலான பிரிவு மக்களால் இதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதை கற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு சக்தி இல்லை. ரொக்கமில்லா பரிவர்த்தனை அவசியம் தான். ஆனால் அது மெதுவாக நடக்கட்டும்’’ என்றார்.