புதுடெல்லி:

ர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான டிக்கெட் முன்பதிவுகளை நிறுத்தியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகளை முடக்கிவைத்துள்ளது. கொரோனா வைரஸ் கொள்ளை நோயை கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதால் அதன்பின் விமான சேவைகள் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் முன்பதிவுகளை முடக்கியிருக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பிடிஐ செய்தி முகமையிடம் பேசுகையில், “ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின் வரும் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிந்தைய தேதிகளுக்கு டிக்கெட் முன்பதிவுகளை அனுமதிக்க விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார். அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் விமான ஓட்டிகளுக்கு 10 விழுக்காடு ஊதியத்தைக் குறைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த முடிவுக்கு ஏர் இந்தியா விமான ஓட்டிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் முடிவு, பிரதமரின் அறிவுறுத்தலுக்கு முரணாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.