புது டெல்லி:

த்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, அனைத்து சுற்றுலா நுழைவு இசைவுகளையும் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்து சுற்றுலா நுழைவு இசைவுகளும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதில் அலுவல், வேலைவாய்ப்பு, ஐ.நா மற்றும் சா்வதேச அமைப்புகள், தூதரக ரீதியிலான நுழைவு இசைவுகளுக்கு விலக்களிக்கப்படுகிறது. வரும் 13-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இத்தாலி தலைநகர் ரோம் மற்றும் மிலனுக்கு ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் பற்றாக்குறையால் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட்டில் இருந்து சென்னைக்கு வந்து மீண்டும் புறப்பட்டு செல்லும் லுப்தான்சா விமானம், குவைத்திற்கு செல்லும் 3 விமானங்கள், தோகா, சார்ஜா, ஜெத்தா, தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து மீண்டும் புறப்பட்டு செல்ல வேண்டிய 20 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.