டெல்லி: டெல்லியிலிருந்து மாஸ்கோ சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் நடு வழியிலேயே அந்த விமானம் டெல்லிக்கு அழைக்கப்பட்டது.
ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த விமானத்தை இயக்கும் விமானிகள், விமான ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று அறிந்த பின்னரே அவர்கள் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர, நேற்று இரவு டெல்லியிலிருந்து மாஸ்கோவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.
உஸ்பெகிஸ்தான் அருகே சென்று கொண்டிருந்து போது, விமானி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதி வழியிலேயே அந்த விமானம் டெல்லிக்கு திரும்ப அழைக்கப்பட்டது.
ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்களை அழைக்க அனுப்பப்பட்ட விமானம் என்பதால், அதில் பயணிகள் யாரும் இல்லை. அந்த விமானத்தில் பயணித்த ஏர் இந்தியா ஊழியர்கள் அனைவரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அந்த விமானிக்கு வயது 50. டெல்லியில் வசிக்கிறார். மே 25 அன்று ஏர் இந்தியா விமானத்தில் லூதியானாவுக்கு சென்ற பதினொரு பேரில் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.