விரைவில் தனியாரிடம் கரம்பிடித்துக் கொடுக்கப்படுகிறதா ஏர் இந்தியா?

--

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தில் யாரையும் புதிதாக பணிக்கு சேர்க்கக்கூடாது என்றும், புதிய சேவை எதுவும் துவங்கப்படக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், ஏர் இந்தியா தனியாருக்கு விற்கப்படுகிறதா? என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மோடியின் கடந்த ஆட்சியிலேயே ஏர் இந்தியாவை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், அப்போது ஏலம் எடுப்பதற்கான சரியான நபர்கள் அமையாத காரணத்தால் அந்த முடிவு தள்ளிப்போனது.

தற்போதைய நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் ரூ.70000 கோடி கடனில் இயங்குகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7600 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக அந்நிறுவனத்தை தனியார் வசம் ஒப்படைத்துவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தனியாரிடம் ஒப்படைக்கும் பணிகளை மேற்கொள்ள, மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்துள்ளது மத்திய அரசு. அந்தக் குழு தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, புதிதாக எந்தப் பணியாளர்களையும் ஏர் இந்தியாவில் பணிக்கு எடுத்தல்கூடாது என்பதோடு, இருப்பவர்கள் யாருக்கும் புதிதாக பதவி உயர்வையும் அளித்தல் கூடாது என்ற உத்தரவு வந்துள்ளது.

மேலும், ஏர் இந்தியா சார்பில் புதிதாக எந்த சேவையையும் துவங்கக்கூடாது என்றும், மிகவும் அவசர சேவையாக இருந்தால் மட்டுமே தொடங்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியாரின் கைகளுக்கு செல்லும் நாள் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.