டிபன் பாக்ஸ் சண்டை: ஏர்இந்தியா விமானியின் உரிமம் 6 மாதம் இடை நிறுத்தம்!

டில்லி:

ர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற “டிபன் பாக்ஸ் கழுவச்சொன்னது தொடர்பான சண்டை யில்” ஈடுபட்ட விமானியின் உரிமம் ஆறு மாதங்களுக்கு இடை நிறுத்தப்படுவதாக, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ)  அறிவித்து உள்ளது.

விமானி தனது மதிய உணவுப் பாத்திரத்தைக் கழுவ, விமான பணிக்குழு ஊழியரை நிர்ப்பந்தித்து தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னணியில் விமான இயக்குனரகம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

கடந்த 17ந்தேதி அன்று  பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏஐ 772 விமானத்தை இயக்கு வதற்கு முன்பு ஏர்பஸ் ஏ 319 விமானத்தின் காக்பிட்டில் பைலட் சாப்பிட்டு முடித்து விட்டு, தான் உணவு கொண்டு வந்த பாத்திரத்தை கழுவுமாறு, ஊழியரிடம் விமானி கூறியதால் இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த தகராறு காரணமாக, விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஏர் இந்தியா நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், ஏர்இந்தியா விமானியின் பைலட் உரிமம் 6 மாதம் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.