காற்று மாசு: பயிர்க்கழிவுகளை எரித்ததாக முதன்முறையாக உ.பி.யில் 29 விவசாயிகள் கைது

லக்னோ:

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக,  உ.பி. மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த 29 விவசாயிகளை முதன்முறையாக மாநில காவல்துறை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இது  தொடர்பான வழக்கில், அந்தந்த மாநில தலைமைச்செயலர்களை விசாரணைக்கு அழைத்த உச்சநீதி மன்றம், பயிர்க்கழிவுகளை எரிப்பதை தவிர்த்து மாற்றுவழியை நடைமுறைப்படுத்தும் படியும், விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் படியும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், பயிர் கழிவு எரிப்பு தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கூறிய நீதிபதிகள் மாநில தலைமைச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், பயிக்கழிவுகளை எரிக்க வேண்டாம் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அரசு அறிவிப்பையும் மீறி உத்தர பிரதேச மாநிலத்தில் பயிர்க்கழிவுகளை எரித்த விவசாயிகள் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதல்முறையாக உ.பி.யில் விவசாயிகள் கைது செய்யப்பட்டிருப்பது மாநில விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரித்ததற்காக அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 29 farmers arrested, air pollution, burns paddy stubble, first time up formers arrested, supreme court, UP Farmers, உச்ச நீதிமன்றம், காற்று மாசு:
-=-