போகி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை:

சென்னையில் போகி பண்டிகையால் காற்று மாசு அதிகரித்துள்ளது – என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்களை சாலையில் வைத்து எரித்தனர். இதனால் நகர் முழுவதும் ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது.

சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வாரியம் கூறுகையில், போகி பண்டிகையால் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை விட இது அதிகமாகும். அதிகப்பட்சமாக விருகம்பாக்கத்தில் காற்றை சுவாசிக்கும் போது நுண்துகள்களின் அளவு 386-ஆக இருந்தது. கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியன அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக இருந்தது. குறைவான வெப்பநிலை, குறைந்த காற்றின் வேகத்தால் காற்றில் நுண்துகள்கள் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்தன’’ என்று வாரியம் தெரிவித்துள்ளது.