மாசு. திடீர் திடீர் என தீ… பதறும் டில்லி மக்கள்

டில்லி

டில்லியில் காற்று மாசுபடுதல் அதிகமாகி புகை மண்டலம் உருவாகி வருவதால் மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.

உலகத்தில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் டில்லியும் ஒன்றாக உள்ளது.  நேற்று ஆபத்தான அளவு என குறிப்பிடப்பட்டதைப் போல இருமடங்குக்கும் மேல் மாசு கலந்ததால் ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.   இதனால் இந்திய மருத்துவசங்கம் மருத்துவ அவசரநிலையை அறிவித்தது.   அதையொட்டி ஆரம்பப் பள்ளிகளை இன்று மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டில்லி நகரில் காற்றில் காணப்படும் மாசின் அளவு 703 புள்ளிகளாக நேற்று இருந்துள்ளது.   அனுமதிக்கப்பட்ட அளவான 300 புள்ளிகளைப் போல இருமடங்கும் மேலாக மாசு காணப்பட்டது.   மேலும் இதை சுவாசிப்போருக்கு நுரையீரல் பாதிக்கப்படும் எனவும் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.   முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்டை மாநிலங்களில் உள்ள காய்ந்துப் போன பயிர்களை எரிப்பதால் வரும் நச்சுப் புகை டில்லியை சூழ்ந்துள்ளதாகவும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

இந்தப் புகை மண்டல சூழலால் விமானப் போக்குவரத்தும் ரெயில் போக்குவரத்தும் பாதிப்பு  அடைந்துள்ளது.   டில்லி சுரங்கப்பாதை மெட்ரோ மற்றும் வீடுகளிலும் இந்த மாசுக் காற்று புகுந்ததால் மக்கள் மூச்சுத்திணறல், கண்ணில் நீர் வடிதல் ஆகிய பாதிப்புக்கு ஆளாகினர்.    அத்துடன் ஒரு சில இடங்களில் கொட்டி வைக்கப்பட்ட குப்பை திடீரென தீப்பிடித்து எரிவதால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

பசுமைத் தீர்ப்பாயம் இந்த காற்று மாசு படுதலுக்கு நடவடிக்கை எடுக்காத டில்லி அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.   ஏற்கனவே பசுமைத் தீர்ப்பாயம் எலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது.   ஆனால் அரசு அவ்வாறு செய்யவில்லை.   அதையும் தீர்ப்பாயம் கடுமையாக கண்டித்துள்ளது.   இது குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, டில்லி, அரியான, உ.பி ஆகிய மாநில அரசுகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.