டெல்லி: காற்று மாசால், டெல்லி நகரம் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், குருகிராம் நகரம் மிக அபாய கட்டத்தை எட்டி இருக்கிறது.


தலைநகர் டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மோசமடைந்திருக்கிறது. அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரித்தது, வாகன புகை என காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
மக்களின் கடும் அவதியை தொடர்ந்து டெல்லியில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. டெல்லி மட்டுமல்லாது, பரீதாபாத், காசியாபாத், கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகிய இடங்களும் காற்றின் மாசுபாட்டுக்கு தப்பவில்லை.


அதிலும் குருகிராம் பகுதியின் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. காற்றின் தரக்குறியீடு 703ஐ எட்டி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த அளவு மிக மோசமான பாதிப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அடர்ந்த பனிப்புகை போன்று காற்றின் தரம் இருக்கிறது. அதனால், அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். 150 மீட்டர் தொலைவுக்கு சாலைகள் தெரியாத அளவுக்கு காற்றின் மாசு பரவி இருந்தது.


நச்சுக்காற்றால், பொதுமக்கள் மூச்சுவிட சிரமப்பட்டனர். பல்வேறு உடல் உபாதைகளுக்கும் அவர்கள் ஆளாகினர். இது குறித்து நரேஷ்குமார் பரத்வாஜ் என்பவர் கூறி இருப்பதாவது:
நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. கண்களில் கடும் எரிச்சல் ஏற்படுகிறது. கைக்குட்டை இல்லாமல் சாலைகளில் செல்ல முடியவில்லை என்றார்.


குருகிராமின் ஓம்நகரைச் சேர்ந்த தரம் சிங் யாதவ் என்ற மூத்த குடிமகன் கூறி இருப்பதாவது: பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது இப்போது எல்லாம் மயக்கம் வருகிறது. சாலைகளில் வாகன பெருக்கமும் சுற்றுச்சூழல் மாசடைய ஒரு காரணம் என்றார்.
இதே காலநிலை அடுத்த 3 நாட்களுக்கு குருகிராம் பகுதியில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.