‘நாம் எங்கே செல்கிறோம்:’ சென்னையில் கூவி கூவி விற்கப்படும் “சுத்தமான காற்று”

சென்னை:

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக, தற்போது சுத்தமான காற்று பாட்டில்களில் அடைக்கப்பட்டு தெருவில் கூவி கூவி விற்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்….

தொழிற்புரட்சி, டிஜிட்டல் மயம் என்ற பெயரில் நாம் நமது சுகாதாரத்தை இழந்துகொண்டிருக்கிறோம்…. நாட்டின் விரைவான பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ஆங்காங்கே அமைக்கப்பட்டு வரும் தொழிற் சாலைகள், அதற்கு அழிக்கப்படும் இயற்கை வளங்கள் போன்ற காரணங்களால் நாம் சுவாசிக்கும் காற்றையே விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த சில பல ஆண்டுகளாக சுத்தமான தண்ணீருக்காக நாம், பாட்டில்களில் மற்றும் கேன்களில்  அடைக்கப்பட் டுள்ள தண்ணீரை வாங்கி பருகி வருவதுபோல விரைவில், சுத்தமான காற்றையும்  நாம் பாட்டிலில் வாங்கி சுவாசிக்க வேண்டிய இக்கட்டானா  நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்…

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில், நாம் நமது இயற்கை வளங்களை இழந்தும், சுத்தமான காற்றினை சுவாசிக்கும் தன்மையை இழந்து பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகிறோம்… இதுவே உண்மை…

தொழிற்சாலைகளின் அமோக வளர்ச்சி காரணமாக அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலக்கப்படுவதால் தண்ணீரும் மாசாகி போன நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றும் அமில வாயுக்களால் காற்றும் மாசாகிப் போனது.  நீர் மற்றும் நிலம் உள்பட அனைத்து இயற்கை வளங்களும் மாசாகி தற்போது மனித ஆரோக்கி யத்திற்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என உலகமே தற்போது குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபாட்டால் மனிதர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டி ருக்கிறது. உலக சுகாதார அமைப்பும் பல்வேறு  புள்ளி விவரங்களை வெளியிட்டு நம்மை எச்சரிக்கை செய்து வருகின்றன.

காற்று மாசு காரணமாக  நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதை  கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதுவும் பெரிதாக வெற்றி அடைவதில்லை.

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள  சீனா மற்றும் இந்தியாதான் அதிக அளவு மாசுபாடு உடைய நாடாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

ஒருபுறம் காற்று மாசு, நீர் மாசு என்று கூக்குரல் இடும் அரசு, அதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிருங்கள், வீடு தோறும் மரங்கள் வளருங்கள் என்று  என்று ஒருபுறம்  கூறி வரும் அரசுகள், சாலை விரிவாக்கத்திற்காக பசுமை யான காடுகளையும், எழில் கொஞ்சும் இயற்கை வளங்களையும் மற்றொரு புறம் அழித்து வருகிறது.

பல நாடுகளில் சுத்தமான காற்று விற்பனை செய்வதற்கான சட்ட திருத்தங்களும் மேற்கொண்டு வருகின்றன. இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையிலேயே தற்போது மனிதகுலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வரும்  சுவாசிக்க இயற்கை அளித்த ஆக்சிஜனும் தற்போது கெட்டுப்போய்க்கொண்டிருக்கிறது. இதனால் விரைவில் காசு கொடுத்து காற்று வாங்கும் அவலம் அரங்கேறி வருகிறது….

இனி வருங்காலம் இப்படித்தான் இருக்கும் என  ஒரு சில நிறுவனங்கள் தற்போதே அதற்கான அடித்தளமிட்டு காற்றையும் பாட்டிலில் அடைத்து விற்பனைக் கொண்டு வந்துள்ளன.  சென்னையில் தற்போது சுத்தமான காற்றும் விற்பனைக்கு வந்துள்ளது. மக்கள் அதிகமாக கூடும் கடற்கரை, பூங்கா பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் தண்ணீரை போல சுத்தமான காற்றையும் பாட்டில்களில் அடைத்து கூவி கூவி விற்பனை செய்து வருகின்றன.

தற்போது முதியோர்களையும், நோயாளிகளையும்,  பணக்காரர்களையும் குறிவைத்து சுத்தமான காற்று என்ற பெயரில் எதையோ விற்பனை செய்து வருகிறார்கள். கடற்கரை, பூங்காக்களில் நடை பயிற்சி மேற்கொண்டு வரும் வயதான தம்பதிகள், ஆஸ்துமா நோயாளிகள் போன்றவர்களிடம்  இந்த காற்று விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஒரு லிட்டர் சுத்தமான காற்று ரூ.650 ரூபாய் என  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உலக நாடுகளில், குறிப்பாக சீனாவில் இதுபோன்று சுத்தமான காற்று விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உயர்வகுப்பு மக்களிடையே  வரவேற்பு பெருகி வரும் நிலையில், தற்போது பிளாட்பாரங்களில் கூவி விற்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வரும் காற்று அடைக்கப்பட்டுள்ள பாட்டில்கள்

விலை மதிப்பு மிக்க காற்று இன்று  பாட்டிலில்  அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது விற்பனை மெதுவாக இருந்தாலும், வருங்காலங்களில் காற்று விற்பனை அமோகமாக இருக்கும் என்று காற்றை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற நிலை நாட்டில் ஏற்பட்டால்… சாமானிய மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்… தற்போது ஒரு இடங்களுக்கு செல்லும்போது நமக்கு தேவையானவற்றை எடுத்தும் செல்லும்போது,  அத்துடன் இனிமேல் காற்று அடைக்கப்பட்ட பாட்டிலையும் சுமந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி வருகிறோம்..

நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.. நமது சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.. வருங்கால சந்ததியினர் என்ன செய்யப்போகிறார்கள்…. ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால்….. நமது கண்முன் வெறும் இருட்டுதான் தெரியும்….

வருங்கால சந்ததியினரையாவது  ஆரோக்கியமாக வளர்க்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க முயற்சி செய்வோம்….