உள்நாட்டு விமானப் போக்குவரத்து – முதல்நாள் நிலவரம் என்ன?

புதுடெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவக்கப்பட்ட முதல் நாளான இன்று(மே 25), 532 விமானங்கள் இயங்கின மற்றும் 39,231 பயணிகள் பயணம் செய்ததாக தொடர்புடைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், பல விமானங்கள் ரத்தானது, அதனால் பயணிகளின் புகார்கள் குவிந்தது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் இன்று பஞ்சமில்லை.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பல பயணிகளுக்கு விமான நிலையத்திற்கு சென்ற பின்னர்தான், அவர்களுடைய விமானங்கள் ரத்துசெய்யப்பட்ட தகவலே கிடைத்தது. டெல்லி விமான நிலையத்தில் மட்டும் 100 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

தங்கள் பயணம் தொடர்பான பல படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர் பயணிகள். மொத்தமாக, 39,321 பயணிகள் பயணம் செய்ததில், அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கை என்பது 60% ஆக இருந்தது. ஒட்டுமொத்த பயணிகள் விகிதம் 55% என்பதாக இருந்தது.

இண்டிகோ நிறுவனம் 200க்கும் மேற்பட்ட விமானங்களையும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சுமார் 80 விமானங்களையும், ஏர்ஏசியா கிட்டத்தட்ட 40 விமானங்களையும், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்கள் தலா 20 விமானங்களையும் இயக்கின.