ஏர்செல் மேக்சிஸ்: குற்றப்பத்திரிகை வெளியானது குறித்து சி.பி.ஐ. மீது ப.சிதம்பரம் வழக்கு

டில்லி:

ர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து  சி.பி.ஐ. மீது சிபிஐ  சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறை களை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தாக கூறப்பட்டது. இதுகுறித்து சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில், அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ப.சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானது. இதுகுறித்து சிபிஐ மீது ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். சிபிஐ நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிட்ட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்,  குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ ஊடகங்களில் வெளியிட்டுவிட்டதாகவும், இதன் காரணமாக  விசாரணை நேர்மையாக நடைபெறுவதை சி.பி.ஐ. விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

You may have missed