Random image

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு

டில்லி:

ர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு செய்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அக்டோபர் மாதம்  8ந்தேதி வரை தடையை  நீட்டித்து டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, 2006ம் ஆண்டு,  மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இதுகுறித்து சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் இருவர் மீதான விசாரணை நடைபெற்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் ஜாமின் மனுக்கள் மீதான கடந்த மாத விசாரணை யின்போது டில்லி பாட்டியாலா நீதிமன்றம், அக்டோபர் 8ந்தேதி வரை இருவரையும் கைது செய்ய தடை விதித்தும், ஜாமினை நீட்டித்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து வரும் 18ந்தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.