சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளதன் மூலம் நீதி வென்றுள்ளது, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் சன் டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் ஆகியோரை விடுவித்து டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததாவது:

“ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நீதிமன்ற அளித்த தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். திமுக மீது அவதூறு பரப்பவே இந்த வழக்கு புனையப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலமாக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது. திமுகவின் புகழுக்கு களங்கம் விளைக்க வேண்டும் என நினைத்தவர்கள் ஏமாந்து போய்விட்டனர்.

தயாநிதிமாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது புனையப்பட்ட வழக்கை நீதிமன்றமே ரத்து செய்துள்ளது பாராட்டதக்கது. அரசியல் ரீதியாக போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.