ஏர்செல்மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர் நெருக்கடி கொடுக்கும் சிபிஐ!

டில்லி,

ர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் இன்று  நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை தொடர்ந்து இன்று அவர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆவார் என்று தெரிகிறது.

இதற்கிடையில், லுக்அவுட் நோட்டீஸ் விவகாரம் குறித்த வழக்கிலும் நாளை சிபிஐ அலுவலகத் தில் ஆஜராக கார்த்திக்கு மேலும் ஒரு சம்மன் அனுப்பி நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக   முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு விவகாரத்தில்  கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் கன்சல்டிங் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது.  அதில், சி.பி.ஐ. டில்லி அலுவலகத்தில் இன்று நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜர் ஆவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து  சிபிஐ விசாரணைக்கு கார்திதி சிதம்பரம் ஆஜராகி வருகிறார். இதுவரை இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில்,  நாளை மீண்டும் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதே வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் சம்மன் அனுப்பி விசாரணை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து  விசாரணை என்ற பெயரில் அவரை அலைக்கழித்து வருகின்றனர். சிபிஐ கொடுத்து வரும் தொடர் நெருக்கடி காரணமாக கார்த்தி சிதம்பரம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.