சென்னை

இன்று காலை முதல் ஏர்செல் மொபைல் சேவை திடீரென நிறுத்தப் பட்டுள்ளது.   இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.    ஏர்செல் நிறுவனம் எந்த ஒரு முன்னறிவிப்பும் செய்யாமல் இவ்வாறு நிகழ்ந்துள்ளதை பலரும் கண்டித்துள்ளனர்.

இது குறித்து நெட்டிசன் P KATHIR VELU அவர்களின் முகநூல் பதிவு இதோ :

P கதிர்

”ஏர்செல்லின் அழிவு அல்லது வீழ்ச்சி இவ்வளவு கொடியதாய் இருக்குமென கற்பனைகூட செய்திருக்கவில்லை. நேற்றுதான் ஏர்செல் டீலராக இருக்கும் ஒரு நண்பரிடம் என்ன செய்யலாம் என தனிப்பட்ட முறையில் கேட்டேன். மீள்வதற்கு வாய்ப்பு குறைவு, மாத்திக்குங்க என்றார்.

இன்று காலை வேறு நிறுவனத்திற்கு மாறிவிடலாம் என MNP கொடுத்தால் பதில் கிடைக்கவேயில்லை. அப்படியே பதில் கிடைத்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு Port In கொடுப்பதில் அதீத தாமதமென்று அதிகாரியொருவர் கூறினார். தற்போது மாவட்ட தலைநகரில் இருக்கும் என் கைபேசியின் ஏர்செல் நெட்வொர்க் செயலிழந்து போயிருக்கிறது. குடும்பத்தில், உறவுகளில் என பலரின் எண்களுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. ஏர்செல் (ஆ) இணையப் பக்கமும் முடக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே வாடிக்கையாளர்கள் ஏர்செல் டீலர்களை, நிறுவனத்தை முற்றுகையிடுவதாக தகவல்கள்.

என்னிடம் இரண்டாவது ஒரு எண் இருப்பதால் இப்போதைக்கு சமாளித்துக் கொள்ள முடியும். ஆனால் வங்கிப் பரிவர்த்தனை (OTP பெறாமல்) உட்பட எதையும் இந்த எண் மீண்டும் இயங்கும் வரை செய்யவியலாது. கைபேசி அல்லது இணையம் முடங்கினால் நிதர்சனம் பல்லிளித்துவிடும் என்பதை டிஜிட்டல் இந்தியா முழக்கத்தினூடே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அனைத்து தொடர்புகளுக்கும் ஏர்செல்லை மட்டுமே நம்பியிருந்தவர்களை நட்டாற்றில் விட்டிருக்கிறது. ஏறத்தாழ 2 கோடி இணைப்புகள் தமிழகத்தில் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தின் நெட்வொர்க் படிப்படியாக செயலிழந்து போவதை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) முன்பே கவனித்து தடுக்காமல், மக்களுக்கான அவகாசம் கொடுக்க நிர்பந்திக்காமல், எப்படி அமைதியாக வேடிக்கை பார்க்கிறதென்றும் தெரியவில்லை. நாளை இன்னொரு நிறுவனம் இதேபோல் துரோகம் செய்ய மாட்டார்கள் என என்ன நிச்சயம்!?

வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலும் குழப்பங்கள், கொந்தளிப்புகள் ஏற்படா வண்ணம் உடனடியாக தடுக்கப்படுவது மிகவும் அவசரமானது.”