2018 முதல் 6 மாநிலங்களில் சேவையை நிறுத்துகிறது ஏர்செல்

டில்லி,

தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள போட்டிகளை சமாளிக்க முடியாமல் அடுத்த ஜனவரி மாதம் 31ந்தேதி உடன் 6 மாதங்களில் தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக ஏர்செல் மொபைல் சேவை நிறுவனம் அறிவித்து உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் ஏற்படுத்திய அதிரடி புரட்சியை தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தங்களது சேவையை தொடர முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. இதைத்தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தங்களது சேவைவை ஜியோவுக்கு போட்டியாக அறிவித்து தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து வருகின்றன.

இந்நிலையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத ஏர்செல் நிறுவனம் முதல் கட்டமாக தங்களது சேவையை 6 மாநிலங்களில் நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.

இதுகுறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருப்பதாக  டிராய் தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 31ந்தேதியுடன்  குஜராத், மராட்டியம், அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழங்கி வரும் சேவையை ரத்து செய்கிறது.

இதன் காரணமாக இந்த 6 மாநிலங்களில் உள்ள பயனாளர்கள் மற்ற நெட்வொர்க்குக்கு மாற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை தொடர்ந்து வழங்கும் என்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.