டில்லி

யணிகளை எற்ற மறுக்கும் விமான நிறுவனங்கள் பயணிகளுக்குக் கட்டணத்துடன் 400% இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மக்களவையில் தெரிவித்தார்.

இந்தியாவில் பல விமான நிறுவனங்கள் பயணிகளை பல்வேறு காரணங்களுக்காக ஏற்றிச் செல்ல மறுத்து வருகின்றன.  சென்ற அக்டோபர் மாதத்தில் 1102 பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் பயணிகள் எண்ணிக்கை ஏர் இந்தியா  822, ஸ்பைஸ் ஜெட் 226, இண்டிகோ 35, ஏர் ஆசியா, 14 மற்றும் விஸ்தாரா 5 என உள்ளது.  இவ்வரிசையில் கடந்த மே மாதம் 3351 பயணிகளும் ஜூன் மாதம் 3834 பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு இருந்தும் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுப்பதற்கு விமானச் சேவை ரத்து, பழுது ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.   இதில் பல நேரங்களில் பயணிகளுக்கு மாற்று விமானச் சேவையில் இடம் ஒதுக்கப்பட்டாலும் அவர்களால் குறித்த நேரத்துக்குப் பயணிக்க முடியாத நிலை உள்ளது.

இதற்குப் பயணிகளுக்கு எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து மக்களவையில் தேவ்ஜி படேல் மற்றும் ராம் சங்கர் கத்தாரியா ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள்.  இதற்கு மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று மக்களவையில் பதில் அளித்தார்.

அவர் தனது பதிலில், “பயணிகளை ஏற்றிச் செல்ல மறுக்கும் விமான நிறுவனங்களுக்குச் சிறப்பு விதிமுறைகள் கடந்த பிப்ரவரி மாதம் விமானப் பயணத்துறை அமைச்சரகம் அறிவித்துள்ளது.  அதன்படி மாற்று விமானச் சேவையை ஏற்காத பயணிகளுக்கு முழுக் கட்டணத் தொகை, விமான நிலையம் வரும் எரிபொருள் செலவு மற்றும் 400% இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகைக்கு அதிக பட்சமாக ரூ.20000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கடந்த  அக்டோபர் மாதம் ரூ.47 லட்சம் இழப்பீடாகப் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அதே வேளையில் பயணிகளே பயணம் செய்ய மறுத்தால் இழப்பீடு வழங்கப்பட மாட்டாது.   விமானம் ரத்து செய்யப்பட்டால் ஒரு மணி நேரத்துக்குள் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.