புதுடெல்லி: திருச்சி, வாரணாசி உள்ளிட்ட நாட்டின் 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும்படி, விமான நிலைய ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி, வாரணாசி, அமிர்தசரஸ், புவனேஷ்வர், இந்தூர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்கள்தான் அவை. இதுகுறித்த தகவல்கள் ஏற்கனவே கசிந்த நிலையில், தற்போது விமான நிலைய ஆணையமே பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பரிந்துரை குறித்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விவாதித்து முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், மங்களூரு மற்றும் குவகாத்தி ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், இந்தக் குறிப்பிட்ட விமான நிலையங்களின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை அரசு மற்றும் தனியார் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும். ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் பலவித நடவடிக்கைகளும் மோடி அரசில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.