டில்லி,
6 முக்கிய விமான நிலையங்களில் பயணிகளின் உடமைக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு முத்திரை மற்றும் போர்டிங் பாஸ் போன்ற வற்றில் புதிய விதிமுறைகளை புகுத்த மத்திய அரசு உத்தேசித்து உள்ளது.
மேற்கத்திய நாடுகள் போன்று இந்திய விமான நிலையங்களிலும், பாதுகாப்பு முத்திரை அட்டைகள் கூடிய விரைவில் அகற்ற படும் என்று விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.
விமானப் பயணங்களின்போது வழக்கமாக பின்பற்றப்படும் இரண்டு நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் ஐந்து முக்கிய விமான நிலையங்களான, டில்லி, கொல்கத்தா,  ஹைதெராபாத், சென்னை மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில், சோதனை அடிப்படையில் ‘Security Clearance Tag’ எனப்படும் பாதுகாப்பு முத்திரை  நீக்க விமான போக்கு வரத்து துறை முடிவு செய்துள்ளது.
“இந்த சோதனை அடிப்படையிலான மாற்றங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து, இந்த மாற்றம் மற்ற விமான நிலையங்களிலும் விரிவாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான வழிமுறைகளை மத்திய தொழிற் பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையினால் விமான நிலையங்களில் தேவைப்படும் பாதுகாப்பு படையின் எண்ணிக்கை குறைவது மட்டுமின்றி பயணிகளுக்கும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விமானத்திற்குள் பயணிகள் கையில் எடுத்துக் செல்லும் அனைத்து பைகளும் பாதுகாப்பு அலுவலகர்களால் ஸ்கேன் செய்யப்பட்டு,  பின்னர் ‘Security Clearance Tag’ எனப்படும் பாதுகாப்பு முத்திரை இடப்படுகிறது.
இந்த முத்திரை இல்லாவிடில், பயணிகள் விமானத்திற்குள் அனுமதிக்க படுவதில்லை. இது போன்ற  கிளியரன்ஸ் முத்திரை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமான நிலையங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல்,  மின்னணு முறையிலான போர்டிங் பாஸ் என்று அழைக்கப்படும் பயண அனுமதி சீட்டுக்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் படி மின்னணு பயண அனுமதி சீட்டு, பயணிகளின் மொபைல் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். விமான நிலையத்தில் பயணிகள் மொபைல் போனில் வந்துள்ள மின்னணு பயண அனுமதி சீட்டை காட்டினால் மட்டும் போதும்.
விமான நிலைய அதிகாரிகள் அதனை ஸ்கேன் செய்த பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இந்த இரு புதிய வசதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக விமான போக்குவரத்துதுறை அறிவித்து உள்ளது.