சென்னை:

பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாரதி ராஜா தலைமை யிலான தமிழர்கள் பண்பாட்டு இலக்கிய குழுவினர்  சென்னை விமான நிலையத்தில் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ள மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கருப்பு கொடி போராட்டத்துக்கு தமிழக எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி இன்று சென்னை விமானம் நிலையத்திற்கு பாதுகாப்பையும் மீறி தனித்தனியாக வந்த போராட்டக்குழுவினர், விமான நிலைய வளாகத்தில் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், கவுதமன், அமிர் உள்பட சிலர் தடையை மீறி விமான நிலையத்திற்குள் வந்து போராட்டம் நடத்தினர்.

இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி அவர்கள் விமான நிலையத்திற்குள் வந்து மோடிக்கு எதிராக கோஷமிட்டு  போராட்டம் நடத்தியது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைக்கண்ட   காவல்துறையினர் போராட்டக்கார்களை உடனடியாக  கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.