5 கோடி வாடிக்கையாளர்களை இழந்தாலும் பாதிப்பில்லை: ஏர்டெல் நிறுவனம் விளக்கம்

புதுடெல்லி:

5 கோடி வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் இழந்தாலும், அதிக வருவாய் தரும் வாடிக்கையாளர்களை இழக்கவில்லை என பாரதி ஏர்டெல் நிர்வாக இயக்குனர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

பாரதி ஏர்டெல் நிர்வாக இயக்குனர் கோபால் விட்டல்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த காலாண்டில் 5 கோடி வாடிக்கையாளர்கள் ஏர்டெல் சேவையிலிருந்து விலகியுள்ளனர். இவர்கள் அனைவரும் குறைந்த வருவாய் அளித்த வாடிக்கையாளர்கள்.

சேவைகளை அதிகம் பயன்படுத்தி, அதன் மூலம் பெறும் அதிக வருவாய் தருபவர்கள்தான் வாடிக்கையாளர்கள் என்று கணக்கில் கொள்ளப்படும். குறைந்தபட்ச சேவையை பயன்படுத்துவோர், வருவாய் தரும் வாடிக்கையாளர் என்று அர்த்தமாகாது.

கடந்த டிசம்பரில் 5 கோடி முதல் 7 கோடி வரை வாடிக்கையாளர்களை இழந்தபோதிலும், இன்னும் எங்கள் சேவையை குறைவாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடந்த டிசம்பர் வரை, ஏர்டெல்லுக்கு 28.4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள வாடிக்கையாளர் தரவுகளை ஒப்பிடும் போது, ஏர்டெல்லுக்கு 5.7 கோடி வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர்.

2ஜியிலிருந்து 4 ஜிக்கு மாறிய எங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. விலை குறைப்பு என்று கூறி கீழ்மட்டத்துக்குச் செல்ல நாங்கள் விரும்பவில்லை. ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்றவாறு நல்ல சேவையை மேன்மைப்படுத்த விரும்புகின்றோம்” என்றார்.