ஐ.நா.வில் அரங்கேறியது ஐஸ்வர்யா தனுஷின் பரதம்!

நியூயார்க்,

நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில் ரஜினியின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவின் நடனம் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அவரது நடனம் ஐ.நா. சபையில் நடைபெற்றது.

இதன் மூலம்,  190 நாடுகள் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதகரத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

ஐஸ்வர்யா தனுஷ்,  கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து   உலக மகளிர் தினத்தை கவுரவப்படுத்தும் விதத்திலும், இந்திய கலாச்சாரத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையிலும்  இந்தியாவின் பாரம்பரிய நடனக்கலையான பரத நாட்டியத்தை ஐ.நா.வில் அரங்கேற்றி உள்ளார்.

இந்த நடன நிகழ்ச்சிக்கு  ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதரகம்  ஏற்பாடு செய்தது. சுமார்  1 மணி நேரம் நடைபெற்ற இந்த பாரம்பரியமான நிகழ்ச்சியில்,  நடராஜர் குறித்து ஆரம்பித்து, மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி,  உலக பெண்களின் மகத்துவம் பற்றியும் நடனத்தின் மூலம் உலகுக்கு அறிய செய்தார்.

ஐஸ்வர்யா தனுஷின் நடனத்தை ஐ.நா.சபையில் நடைபெற்ற உலக மகளிர் தின  விழாவில் கலந்துகொண்டவர்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஐ.நா.வில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published.