தான் கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு…..!

டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் திருச்சியில் டெட் எக்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கடந்து வந்த பாதை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.

“நான் பிறந்த வளர்ந்தது சென்னையில். நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே இருந்த ஒரு குடும்பம். குடிசைப் பகுதியில், ஹவுஸிங் போர்டு பகுதியில்தான் நான் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, 3 அண்ணன்கள், நான் என மொத்தம் 6 பேர்.

என்னுடைய 8-வது வயதில் என் அப்பாவை இழந்தேன். அதன் பிறகு என் அம்மாதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். அப்பாவின் இழப்பை உணராத வகையில் எங்களை வளர்த்தார்.

எனக்கு 12 வயதானபோது என் மூத்த அண்ணன் ராகவேந்திரா இறந்து போனார்.

சில வருடங்கள் போயின. எனது இரண்டாவது அண்ணன், எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்தார். அவருக்கு 30,000 – 40,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. ஆனால் அந்த அண்ணன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.

பின் நான் பிறந்த நாள் விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என்று வேலை செய்து 500, 1000 ரூபாய் என சம்பாதித்தேன். ஒரு மாதத்துக்கு 5000 ரூபாய் வரை சம்பாதித்தேன்.

டிவி தொடர்களில் நடிக்க முடிவெடுத்தேன்.சரி சினிமாவில் நடிக்கலாம் என்று முயற்சி செய்தேன். நடுவில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதில் முதல் பரிசு பெற்றேன். அது எனக்கு சினிமாத் துறையில் ஒரு அறிமுகம் கிடைக்க உதவியது. மானாட மயிலாட டைட்டில் வின்னர் என்று கூறி, பலரை அணுகி வாய்ப்புகள் கேட்டேன். நான் நடித்த முதல் படம் ‘அவர்களும் இவர்களும்’. அந்தப் படம் சரியாக ஓடவில்லை.

பாலியல் தொல்லை மட்டுமல்ல, என் நிறம், என் தோற்றம் குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டேன்.

இப்படியே 2-3 வருடங்கள் கடந்தது. எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. பிறகு ‘அட்டகத்தி’ படத்தில் அமுதா என்கிற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்குப் பெயர் வாங்கித் தந்தது. என்னை அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள். தொடர்ந்து ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’, ‘திருடன் போலீஸ்’ என நாயகியாக நடித்து வந்தேன்.

இதன் பின் ‘காக்கா முட்டை’ என்ற படம்தான் என் வாழ்க்கையை மாற்றியது.

இதுதான் என் வாழ்க்கைக் கதை, எனக்கு இன்று கிடைத்திருக்கும் வெற்றியை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்றே நினைக்கிறேன். என் மீது எனக்கு என்றும் நம்பிக்கை இருந்தது. நாம் அனைவரும் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. குறிப்பாகப் பெண்கள் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது.

இந்த வாய்ப்புக்கு நன்றி” என கூறியுள்ளார் .