டெல்லியில் 48000 சேரி குடியிருப்புகளை இகற்றும் முன் மறுவாழ்வு அளிக்க வேண்டும்: சுப்ரீம்கோர்ட்டை நாடிய அஜய் மேக்கன்

டெல்லி: டெல்லியில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 48,000 குடிசைவாசிகளை அகற்றும் முன் அவர்களுக்கு மறுவாழ்வு செய்யக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மேக்கன் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

கடந்த ஆகஸ்டு 31 ம் தேதி, டெல்லியில் ரயில் தடங்கள் வழியாக 48,000 குடிசைகளை3 மாதங்களுக்குள் அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விஷயத்தில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காது என்றும் கூறியது.

இது குறித்து ஒரு டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மேக்கன், “டெல்லியில் சேரிகளை பெருமளவில் இடிக்க வேண்டும் என்ற மனிதாபிமானமற்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் தாம் தொடர்ந்த பொது நல வழக்கில், டெல்லி ஐகோர்ட் அளித்த விரிவான தீர்ப்பில், சேரியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் நகரத்தில் வாழ உரிமை உள்ளது என்றும், மறு வாழ்வு இல்லாமல் அவர்களை அகற்ற முடியாது என்ற சட்டத்தை வகுத்தது என்றும் தமது டுவிட்டரில் கூறி உள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசாங்கங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பை பற்றி தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியுள்ளன. மேலும் நீதிமன்றத்தில் மோசடி செய்ததன் மூலம் சேரிகளை அகற்றுவதற்கான உத்தரவை பெற்றுள்ளன. இப்போது, ​​அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த ஏழை மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.