ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீண்டும் திரும்பியுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் அரசின் நிலைப்பாட்டிற்கு காஷ்மீர் மக்கள் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் அமித்ஷா விளக்கமளிக்கத் துவங்குவதற்கு முன்னதாகவே மீண்டும் காஷ்மீர் சென்றடைந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அங்கே நிலைமையை ஆராய்ந்தார். ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் தலைவர்கள் மற்றும் புலனாய்வுத் துறைகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், சில பொதுமக்களுடனும் பிரிவு 370 நீக்கம் குறித்து கருத்துக் கேட்டறிந்தார். அஜித் தோவல் காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்று அறியப்படுகிறார். கடந்த 1990களின் துவக்கத்திலிருந்து அம்மாநிலத்தில் அதிகரித்த தீவிரவாத நடவடிக்கைகளை நன்கு அறிந்தவர் மற்றும் அம்மாநிலத்தில் அரசின் புலனாய்வுத் துறைக்கும் தலைமையேற்றவர்.

ராஜ்யசபாவில் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தது தற்காலிகம்தான் என்றும், நிலைமை சரியானவுடன் அது மீண்டும் மாநில அந்தஸ்திற்கு மாற்றப்படும் என்றும் கூறியிருந்தார்.