கவலைக்கிடமான நிலையில் அஜித் ஜோகியின் உடல்நிலை!

--

ராய்ப்பூர்: உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர் மருத்துவர்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து கடந்த 2000ம் ஆண்டில் தனிமாநிலமாக சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டபோது, அம்மாநில முதல்வராக முதன்முறையாகப் பதவியேற்றவர் அஜித் ஜோகி.

கடந்த 9ம் தேதி அஜித் ஜோகிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது 74 வயதாகிறது.

அவரது உடலில், நரம்பு மண்டலங்கள் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ‘கோமா’ நிலையில் உள்ள அஜித் ஜோகிக்கு, செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மூளையை செயல்பட வைப்பதற்காக ‘ஆடியோ தெரபி’ சிகிச்சையும் துவங்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பிடித்த பாடல்களை ‘ஹெட்போன்’ மூலமாக மருத்துவர்கள் ஒலிக்கச் செய்கின்றனர் ஆனாலும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.