ஹலோ..! அமைச்சர் பதவி தர்றேன் வாங்க! என்சிபி எம்எல்ஏக்களுக்கு போன் போட்ட அஜித்! சரத் பவாரிடம் எம்எல்ஏக்கள் புகார்

மும்பை: அமைச்சர் பதவி தருகிறோம் என்று எங்களிடம் அஜித் பவார் ஆசை காட்டியதாக தேசியவாத காங்கிரசின் முக்கிய எம்எல்ஏக்கள், சரத்பவாரிடம் கூறி இருக்கின்றனர்.

யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணையுடன், மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்து இருக்கிறது. பாஜகவின் இந்த அதிர்ச்சி வைத்தியத்தால் அரண்டு போயிருக்கும் தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கின்றன.

தமது கட்சி எம்எல்ஏக்களை காபந்து பண்ணும் வகையில், அனைவரும் மும்பையில் உள்ள பிரபல சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சரத்பவாரும், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவும் சந்தித்து பேசினர்.

தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் சரத்பவார், மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழலால் உங்களுக்கு ஏதேனும் நெருக்கடிகள், பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த என்சிபி எம்எல்ஏக்கள் சிலர், அஜித் பவார் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறினர்.

மேலும், பாஜக கூட்டணியை ஆதரியுங்கள், அமைச்சர் பதவி வாங்கி தருகிறேன் என்று ஆசை காட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏக்களை பதவி ஆசை காட்டி அஜித் பவார் அணுகி இருப்பது குறித்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் நடைபெற்ற முக்கிய ஆலோசனையின் போது சரத்பவார் பகிர்ந்திருக்கிறார்.