ஜீத் நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள விவேகம் படத்தின் கதை தன்னுடையது என்று தாயரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் என்பவர் குமுறலுடன் தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் சிவா இயக்கியிருக்கும் ‘விவேகம்’  திரைப்டம் சமீபத்தில் வெளியானது. இப்படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் பலராம் பதியப்படுகின்றன. அப்படி பதிபவர்களை அஜித் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் தரம்தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் என்பவர் ‘விவேகம்’ கதை தன்னுடையது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“நான்  ’ஐ-நா’ என்ற பெயரில் திரைப்படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறேன். அந்த ஐநா.வின் அடிப்படைக் கதைதான் ’விவேகம்’ படத்தின் கதை.

விவேகம் – ஐ.நா.

என் படம் 2013ல் எழுதப்பட்டது. இந்த கதையை அஜித் குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறினேன். திரைக்கதை வடிவத்தையும் அளித்தேன். அஜித்தை சந்திக்க வைக்கிறேன் என்று அவர் மூன்று  வாரம் எடுத்துக் கொண்டார். பிறகு அஜித் புதுமுக இயக்குநருடன் கதையில் நடிக்க மாட்டார் என்று என்னிடம் சொல்லிவிட்டார்.

சமீபத்தில் வெளியான ’விவேகம்’ படத்தை பார்த்த போது நான் சொன்னதில் 60 சதவீதம் திரையில் இருந்தது. திரைக்கதையிலும்  சில பல ஒற்றுமைகள் இருந்தன.

ஆனால் இதற்கும், இயக்குநர் சிவா மற்றும் அஜித்துக்கும்  எந்தத் தொடர்பும் இல்லை என்று  நான் உறுதியாகக் கூறுகிறேன்.

ஏனெனில் அவர்கள் இருவரையும் நான் இதுவரை சந்திக்கவில்லை. ஆகவே இந்தக் கதையை திருடியது அஜித்குமாரின் நெருங்கிய நண்பர்தான்.  அவர் அப்போது என்னை அலையவிட்டு, ’விவேகம்’ படம் பார்க்கும்போது அழவும்விட்டுவிட்டார்.

படம் ஆரம்பிக்கும் முன்னர் படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே என்ற எழுத்துகள் வரும். நம்பமுடியவில்லை.

நான் எனது கதையை பல ஆராய்ச்சிக்குப் பின், நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எழுதியிருந்தேன். அதை அஜித்துக்கு ஏற்றவாறு எழுதியிருந்தேன். ’ஐ-நா’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளுக்கே ஒன்றரை  வருடங்கள் ஆகும்.

 

ரவீந்திரன் சந்திரசேகரன் பதிவு

நான் எனது  கதையை பல பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்கள் விவேகம் படத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டு இந்த அறிவுத் திருட்டைப் பற்றி வருந்தினார்கள்.

ஒரு இயக்குநர், உதவி இயக்குநரின் சிந்தனை திருடப்படும்போது எப்படி வலிக்கும் என்பதை உணர்கிறேன். திரைத் துறையில் இவ்வளவு ஆபத்துகளுக்கு நடுவில் போராடுபவர்களுக்கு என் வணக்கங்கள். ஒரு தயாரிப்பாளராக இருந்து மூன்று  படங்கள் எடுத்த பிறகும்  நான் துரோகத்தை சந்தித்துள்ளேன். இதுவே வேறு யாராவதாக இருந்தால் அவரது மனம் எந்த அளவுக்கு  கஷ்டப்படும்?

நான் இப்போது இதைச் சொல்வது எந்த வித மலிவான விளம்பரத்துக்காகவும் அல்ல. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.

ஒரு எளிய மன்னிப்பு கேட்டால் போதும். பொதுவில் கூட சொல்ல வேண்டாம். தல உடன் இருக்கும்போது தவறுகள் நடக்கக்கூடாது என்பது புரிய வேண்டும். நானும் தல ரசிகன் என்பதால்தான் அவருக்கேற்றார் போல கதையை உருவாக்கினேன்.

விவேகத்தின் தரத்தைப் பற்றி நான் பேசவரவில்லை. படம் அற்புதமாக இருக்கிறது. எனது ‘ஐ-நா’ படத்தின் ஷூட்டிங்க் 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கும்.

சம்பந்தப்பட்ட நபர் என்னை விரைவில் என்னை  தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டால் நல்லது. இல்லையேல் தேவையான ஆதாரங்களுடன் பொதுவில் சொல்லுவேன். அஜித்குமார் என்ற மனிதரை நான் மதிப்பதால் இன்னும் பொறுமையாக இருக்கிறேன். எதிர்காலத்திலும் இது போன்ற பிரச்சினையை யாரும் சந்திக்கக் கூடாது. எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லையே என்று அழம் நிலை ஏற்படக்கூடாது. .

நான் சொல்வதில் நியாயம் இருக்கும் என நினைப்பவர்கள் எனக்கு நீதி கிடைக்க ஆதரவு  கொடுங்கள். உங்களைப் போல கனவுகள் இருக்கும் ஒருவன் நான். தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குநராகவும் கனவு வைத்திருப்பவன்.

இவ்வாறு ரவீந்திரன் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் எழுதியுள்ளார்.

இது திரைத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.