பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

பாட்னா:

பீகார் மாநிலத்தில் சுயேச்சை  எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து  ஏ.கே.47 துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில்  மொகாமா சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் ஐக்கிய ஜனதாதள  எம்எல்ஏ ஆனந்த்சிங்.

பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி உள்ள அவர், மாநில முதல்வர்  நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏ.வாகி இருக்கிறார்.

இந்த நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத்தொடர்ந்து, ஆனந்த்சிங்கின் முதாதையர் வாழ்ந்து வந்த   நாட்வா கிராமத்தில் உள்ள  வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது, அங்கிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை உள்ளூர் எம்.பி. மற்றும் அமைச்சரே காரணம்  என்றும், தான், அந்த வீட்டிற்குச் சென்றே பல ஆண்டுகள் ஆகி விட்டதாகவும் ஆனந்த்சிங் மறுப்பு தெரிவித்து உள்ளார்.