பா.ஜ,க. உறவைத் துண்டித்துக் கொண்ட அகாலிதளம்…

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், சிரோமணி அகாலிதளம் கட்சி, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்  மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாவை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியதால், அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், பா.ஜ.க.தலைமையிலான தேசிய கூட்டணியில் இருந்தும், சிரோமணி அகாலிதளம் நேற்று விலகியது.

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெற்ற கட்சியின் உயர்நிலை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதனை அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிரோமணி அகாலிதளம், பா.ஜ.க.வின் ஆரம்ப நாட்களில் இருந்து தோழமை கட்சியாக இருந்து வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் செல்வாக்கு மிகுந்த கட்சியான அகாலிதளம் , கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ஜ.க.வுக்கு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே, பா.ஜ.க..வின், பழம்பெரும் நட்பு கட்சியான சிவசேனா, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, சில மாதங்களுக்கு முன்பு  வெளியேறி விட்டது..

மக்களவை தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சியும் பா.ஜ.க.கூட்டணியில் இருந்து விலகியது,, குறிப்பிடத்தக்கது.,

-பா.பாரதி.