பா.ஜ.க. தோழமை கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்த அகாலிதளம்.. தேசிய ஜனநாயக கூட்டணியில் மற்றொரு கலகம்…

க்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்-

கூட்டணிக்காக பல்வேறு மாநிலக்கட்சிகளின் கதவுகளை தட்டி தட்டி ஓய்ந்து விட்ட பா.ஜ.க.வுக்கு  ஏற்கனவே இருந்த தோழமை கட்சிகள் கொடுக்கும் குடைச்சல் புதிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

கடந்த மக்களவை தேர்தல் முடிந்த சில தினங்களிலேயே தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சிதறுண்டு போனது.

சில மாதங்களுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், சில தினங்களுக்கு முன் மகந்தாவின் அசாம் கன பரிஷத் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டன.

7 வட கிழக்கு மாநிலங்களில் பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்து ’நேடா’ என்ற பெயரில் புதிய அணி ஒன்றை உருவாகியுள்ளார் அமீத்ஷா. 7 மாநிலங்களிலும் ‘நேடா’வின் ஆட்சிதான்.

மத்திய அரசின் குடிஉரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ‘நேடா’ கூட்டணி யில் அங்கம் வகிக்கும் 7 கட்சிகள் போர்க்குரல் எழுப்பி –‘நேடா’ அணியில் விரிசலை ஏற்படுத்த –

சிரோமணி அகாலிதளம் வடிவில் புதிய  வில்லங்கம் முளைத்துள்ளது.

’ சிவசேனா போலவே , அகாலிதளமும் பா.ஜ.க.வின் பழைய கூட்டாளியாகும்.

மகராஷ்டிர மாநில பா.ஜ.க.அரசு , அந்த மாநில ‘சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி விவகாரங்களில் தலையிடுவது – அகாலி தளம் கட்சியை  ஆத்திரப்படுத்தி யுள்ளது.

குருத்வாரா வாரியங்களில், தங்கள் ஆட்களை நியமித்து –அதனை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வர பட்நாவிஸ் தலைமையிலான அரசு முயல்வதாக குற்றம் சாட்டி சில தினங்களுக்கு முன்பு குருத்வாரா பிரபந்த கமிட்டி  பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில் – நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் தொடரை யொட்டி டெல்லியில் நேற்று நடந்த பா.ஜ.க.கூட்டணி கட்சிகளின் சம்பிரதாய கூட்டத்தை அகாலிதளம் புறக்கணித்தூள்ளது.

குருத்வாரா விவகாரத்தில் மகராஷ்டிர பா.ஜ.க. அரசு தலையிடுவதை கண்டித்தே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல்   அகாலிதளம்  தவிர்த்ததாக அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகள் தரும் தொல்லையால் மோடியும், அமீத்ஷாவும் தூக்கம் தொலைத்து தவிக்கிறார்கள் என்பதே  உண்மை.

–பாப்பாங்குளம் பாரதி