ஆடுகள் ஏற்றுமதியை தடுத்து நிறுத்திய ஜெயின் அமைப்பு

நாக்பூர்

நாக்பூரில் இருந்து ஷார்ஜாவுக்கு ஆடுகள் ஏற்றுமதி நடக்க இருந்ததை ஜெயின் அமைப்பு ஒன்று தடுத்து நிறுத்தி உள்ளது.

ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்ய 1500 ஆடுகள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நாக்பூருக்கு எடுத்து வரப்பட்டன.  இந்த ஆடுகளை விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.   இந்த ஏற்றுமதியின் முதல் விமான சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ், உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ளும் நிகழ்வில் தொடங்கி வைக்கப்பட இருந்தது.

இவ்வாறு ஆடுகள் ஏற்றுமதி செய்வதற்கு ஜெயின் அமைப்பான அகில ஜெயின் சமாஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது.    மிருகவதை சட்டத்துக்கு எதிராக மாநில அரசு நடப்பதாகக் கூறி அந்த விமான சேவைகளை நிறுத்தச் சொல்லி போராட்டம் நடத்தியது.   அதை ஒட்டி விமான சேவை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏற்றுமதி திட்டத்தின் பின்னால் இருந்து இயக்குவதாக கூறப்படும் பாஜக ராஜ்யசபை உறுப்பினர் விகாஸ் மாகாத்மே, “ஜெயின் சமூகத்தின் எதிர்ப்பை ஒட்டி இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  விரைவில் அவர்களை சந்தித்து இந்த ஏற்றுமதியால் நமக்கு கிடைக்கும் பொருளாதாரம் குறித்து விவரிக்க உள்ளோம்.

கடந்த சில வருடங்களாகவே கால்நடைகள் ஏற்றுமதி நடந்து வரும் போது இவ்வாறு திடீரென எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை.    இதன் மூலம் பல விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்பதால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது,”  என கூறி உள்ளார்.    விகாஸ் மகாத்மே கால்நடைகளை விற்பனைக்காக வளர்க்கும் விவசாயிகள் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜெயின் சமூகத்தை சேர்ந்த ரிச்சா ஜெயின், “வன்முறைக்கு ஜெயின் சமூகம் என்றுமே எதிரானது.   இந்த ஆடுகள் ஏற்றுமதி நாக்பூர் நகரத்துக்கு பெரும் அவப்பெயரை உண்டாக்கும்.   நகருக்கு மிருகங்களின் சாபத்தை பெற்றுத் தரும்.  அத்துடன் மிருகங்கள் எண்ணிக்கை குறைவதால் சுற்றுச் சூழல் பெரிதும் பாதிப்படையும்.    எந்த ஒரு உயிருள்ள மிருகத்தையும் கொல்வதற்காக ஏற்றுமதி செய்யக் கூடாது என சட்டம் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.