இந்து கடவுள் விஷ்ணு பெயரில் புதிய நகரம்….ராமர் கோவில் கோஷத்துக்கு அகிலேஷ் யாதவ் பதிலடி

லக்னோ:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டப்பூர்வ வழி ஏற்படுத்தப்படும் என்று உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசால் மவுரியா கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில்,‘‘உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ஏக்கரில் இந்து கடவுள் விஷ்ணு பெயரில் சிங்கம் சவாரி பகுதியில் புதிய நகரம் உருவாக்கப்படும். இதில் விஷ்ணுவுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்படும். இது புகழ்பெற்ற ஆங்கார் வாட் கோவிலை போன்று இருக்கும். இந்த புதிய நகரம் குறித்து திட்டமிட பழங்காலத்தில் கலாச்சாரம், அறிவுசார் நகரமாக திகழ்ந்த கம்போடியாவுக்கு வல்லுனர் குழு அனுப்பி வைக்கப்படும்.

மக்களுக்கான கள வேலைகள் எதையும் பாஜக செய்யவில்லை. சதி திட்டம் தீட்டுவதில் தான் பாஜக.வுக்கு அதிக நம்பிக்கை. எங்களுக்கு வளர்ச்சியில் தான் நம்பிக்கை. ஓட்டுக்காக மக்களை அவர்கள் முட்டாளாக்குவார்கள். வளர்ச்சி பணிகளை தான் நாங்கள் வாக்குகளை பெற பயன்படுத்துவோம். மாநில பாஜக ஆட்சியால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த ஆட்சியை வெளியேற்றும் சந்தர்ப்பத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்’’ என்றார்.

கம்போடியாவில் ஆங்கர் வாட் என்ற மத வளாகம் உலகளவில் பெரியதாக கருதப்படுகிறது. இது இந்து கடவுள் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், படிப்படியாக இது புத்த மத கோவிலாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.