104 நாட்கள கழித்து அகிலேஷூடன் ஒரே மேடையில் சிவ்பால் யாதவ் பங்கேற்பு

லக்னோ:

உ.பி. சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து 104 நாட்களுக்கு பிறகு அகிலேஷ் யாதவும், அவரது மாமா சிவ்பால் யாதவும் ஒரே கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

உ.பி. சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 47 எம்எல்ஏ.க்கள் கட்சியின் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் கூடினர். இதில் கட்சியின் தேசிய தலைவரான அகிலேஷ் யாதவ், இவரால் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இவரது மாமா சிவ்பால் யாதவும் கலந்து கொண்டனர்.

உட்கட்சி பூசல் காரணமாக தேசிய தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங்கை அகிலேஷ் நீக்கிவிட்டு அந்த பதவியை அவர் எடுத்துக் கொண்டார். இந்த பிரச்னைக்கு பிறகு அகிலேஷூம், சிவ்பாலும் நேரடியாக எங்கும் சந்தித்து கொள்ளவில்லை. 104 நாட்கள் கழித்து அகிலேஷூம், சிவ்பாலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனரா என்பதை ஊர்ஜிதபடுத்த முடியவில்லை.

சிவ்பால் அமைதியுடன் இருந்தார். வெற்றி பெற்ற சில எம்எல்ஏ.க்கள் அவரிடம் வாழ்த்து பெற்றனர். அவர் அகிலேஷ் யாதவ் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் உணர முடிந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு காரணம் மீடியாக்களும், வாக்குப்பதிவு எந்திர முறைகேடுகளும் தான் காரணம் என்று தலைவர்கள் பலரும் பேசினர்.

மார்ச் 25ம் தேதி நடக்கும் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் யார் என்பதை அகிலேஷ் யாதவ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 47 இடங்களில் மட்டுமே சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய முடிவுறும் சட்டமன்றத்தில் இக்கட்சியின் பலம் 225ஆக இருந்தது. தற்போது பாஜ 325 இடங்களிலும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.