கராச்சி: கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் சதமடிக்க வேண்டுமென்றே விரும்பினேன்; எனது பந்தில் அவர் ஆட்டமிழந்தது வருத்தத்தையே ஏற்படுத்தியது என்றுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வேகம் சோயப் அக்தர்.
சமீபகாலமாகவே, தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் சோயப் அக்தர். உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்றபோதும்கூட, இந்திய அணியின் கடைசிநேரப் போராட்டத்தைப் பாராட்டியிருந்தார் அவர்.
கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய சச்சின், 75 பந்துகளில் 98 ரன்களை அடித்திருந்தபோது, அக்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதுகுறித்து கூறியுள்ள அக்தர், “அந்தப் போட்டியில் சச்சின் சதமடித்திருக்க வேண்டுமென்றே விரும்பினேன். எனது பவுன்ஸர் பந்தை அவர் சிக்சருக்கு அனுப்பி சதமடிப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் ஆட்டமிழந்தது வருத்தமளிக்கிறது.
எப்படிப் பார்த்தாலும், அது அவருடைய ஸ்பெஷல் இன்னிங்ஸ். சச்சினையும், கோலியையும் ஒப்பிடுவதை சரியான ஒன்றாக நான் கருதவில்லை. ஏனெனில், இருவரின் கிரிக்கெட் காலகட்டமும் வேறுவேறாகும். கடினமான காலக்கட்டத்தில் பேட்டிங் செய்தவர் சச்சின். இப்போது அவர் ஆடியிருந்தால் 1.30 லட்சம் ரன்களுக்கு மேல் குவித்திருப்பார்.
மைதானங்களில் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது, மணமகள் இல்லாமல் திருமணத்தை நடத்துவது போன்றதாகும். ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் வீரர்களால் சாதிக்க முடியாது” என்றார் அக்தர்.