அடுத்த பிரதமர் உத்திரப் பிரதேச உறுப்பினர் : அகிலேஷ் யாதவ்

--

டில்லி

டுத்த பிரதமராக வருபவர் உத்திரப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினராக இருப்பார் என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார்.

நடைபெற உள்ள 2019 பொதுத் தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கி விட்டன.   ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.   அந்த வெற்றி வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் தொடரும் எனவும் இந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக கூட்டணி அமைக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ், “அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து பிரம்மாண்டமான எதிர்க்கட்சி கூட்டணி அமைக்க சமாஜ்வாதி கட்சி பெரிதும் முயன்று வருகிறது.  மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மக்களிடையே பெரும் தோல்வியை  சந்தித்துள்ளது. இது நிச்சயம் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

வரப்போகும் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாறும்.   புதிய பிரதமர் பதவி ஏற்பார்.  அந்தப் பிரதமர் உத்திரப்பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருப்பார்.   சமாஜ்வாதி கட்சியைப் பொறுத்த வரையில் ராகுல் காந்தி அல்லது மாயாவதி இருவரில் யார் பிரதமராக வந்தாலும் ஆதரிக்கும்” என தெரிவித்துள்ளார்.