லக்னோ:

சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.

பாஜக வை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைந்து வரும் நிலையில், உத்திரப்பிரதேச அரசியல் நிலைமை வேறு விதமாக உள்ளது.

சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான முன்னாள் முதல்வருமான மாயாவதியும் ஓரணியில் திரள உள்ளனர்.

இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு கட்சிகளும் இணைவது புதிதல்ல. கடந்த 1993&ம் ஆண்டு பாபர் மசூதி பிரச்சினையை வைத்து உத்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜக முனைப்பாக செயல்பட்டது.

பாஜகவின் திட்டத்தை முறியடிக்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்த கன்சிராமும் அப்போது கைகோர்த்தனர்.

அந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 109 சட்டமன்ற தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 67 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிபெற்றனர். தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக 177 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

சிறு கட்சிகளை சேர்த்துக் கொண்டு சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சி அமைத்தனர். முலாயம் சிங் யாதவுக்கும், மாயாவதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது அந்த ஆட்சி நீடிக்கவில்லை.

1995க்குப் பிறகு இரு கட்சிகளும் தனித் தனியே தேர்தல்களை சந்தித்து வருகின்றன. கடந்த 2017-ல் நடந்த சட்டசபைத் தேர்தலின் போது, முலாயம் கட்சித் தலைவராக இருந்ததால் மாயாவதி கூட்டணி வைக்கவில்லை.
தற்போது அகிலேஷ் யாதவ் கட்சித் தலைவரானதும், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க மாயாவதி மும்முரம் காட்டுகிறார்.