மனைவிக்கு வெங்காயத் தோடு பரிசளித்த பிரபல பாலிவுட் நடிகர்

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது மனைவி டிவிங்கிள் கன்னாவுக்கு வெங்காயத் தோடு பரிசளித்துள்ளார்.

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாகப் பல மாநிலங்களில் வெங்காயப் பயிர் அழிந்தது.   இதனால் நாடெங்கும் தற்போது வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  வெங்காய விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.  அரசு வெளிநாட்டில் இருந்து வெங்காய இறக்குமதியை செய்து வருகிறது.

இது குறித்து சமூக வலை தளங்களில்  பல நெட்டிசன்கள் மீம் உருவாக்கி நகைச்சுவை செய்து வருகின்றனர்.   வெங்காய விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த நகைச்சுவை சற்று சோர்வைக் குறைக்கிறது எனவும் சொல்லலாம்.

பிரபல பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமர் சமீபத்தில் வெளியூர் சென்றிருந்தார்.  அவர் ஊருக்கு வரும்போது தனது மனைவியும் மறைந்த சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் மகளுமான டிவிங்கிள் கன்னாவுக்கு ஒரு ஜோடி வெங்காயத் தோடுகளை வாங்கி வந்து பரிசளித்துள்ளார்.

அந்த தோடுகளின் படத்தை டிவிங்கிள் கன்னா தனது டிவிட்டர் பக்கத்தில்  பதிந்தார்.  தற்போது அந்த செய்தி வைரலாகி வருகிறது.  டிவிங்கிள் தனது டிவீட்டில்,”சில நேரங்களில், வேடிக்கையான மற்றும் சிறிய விஷயங்களும் உங்கள் மனதைத் தொடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.