வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாநில செனட் சபை, கருகலைப்புக்கு தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த சட்டம் அந்த அவையிலுள்ள ஒரு பெண் செனட்டரின் ஆதரவையும் பெறவில்லை என்பதுதான். 25 குடியரசு கட்சி செனட்டர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அடுத்ததாக, அம்மாகாணத்தின் குடியரசு கட்சி கவர்னருடைய ஒப்புதலுக்கு இச்சட்டம் அனுப்பி வைக்கப்படும்.

இச்சட்டத்தின்படி, கற்பழிப்பு மற்றும் முறைதவறிய உறவு ஆகியவற்றால் கருவுற்றால்கூட, கருகலைப்பில் ஈடுபட முடியாது. கருகலைப்பு சிகிச்சையை அளிப்போருக்கு, இச்சட்டத்தின்படி 99 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே, இச்சட்டம் கருகலைப்புக்கு அனுமதிக்கும். ஜார்ஜியா மாநிலமும் இதேபோன்றதொரு சட்டத்தை நிறைவேற்றியது நினைவிருக்கலாம். அந்த மாகாண சட்டப்படி, ஒரு கருவின் இதயத் துடிப்பு உணரப்பட்டுவிட்டால், கருகலைப்பு செய்ய அனுமதியில்லை.

கரு உருவான 6 வாரங்களிலேயே இதயத் துடிப்பு உணரப்பட்டுவிடும். ஆனால், அந்த காலகட்டங்களில் ஒரு பெண்ணுக்கு தான் கருவுற்றிருக்கிறோம் என்ற விஷயமே தெரியாது என்பதுதான் கொடுமையே!

அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான அமைப்பு இச்சட்டங்களை எதிர்த்து போராடுவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த சட்டங்கள், கருகலைப்பு விஷயத்தில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் நிலையை உருவாக்கியுள்ளன என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களில், கருகலைப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.