காஞ்சிபுரம்:

350 ஆண்டுகளையும் தாண்டி கெத்தாக காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அருகே உள்ள ஆலம்பாறை கோட்டையை புணரமைக்க மத்திய அரசு ரூ.8 கோடி ஒதுக்கிய நிலையில், புணரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒருசில மாதங்களில், கோட்டை  மீண்டும் பழைய மகத்துவத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரத்தை அடுத்துள்ளது ஆலம்பாறை கோட்டை. சுமார் 350 ஆண்டுகள் பழமையான  இந்த இடம், ஒரு காலத்தில் முஸ்லீம் மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் செழிப்பான துறைமுகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கோட்டையின் சிதிலமடைந்துள்ள சுவர்கள் மற்றும் கட்டிங்களை புணரடைக்கும் பணி ரூ.8 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

இந்த  பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டத்திற்கான நிதி ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து வந்துள்ளதாகவும், பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் ஏழு மாதங்களில் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்த மறுசீரமைப்பு பண்டைய கோட்டையை மீண்டும் உயிர்ப்பிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணி களையும் ஈர்க்கும்” என்று தொல்லியல் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.

ஆலம்பாறை கோட்டையின் சிறப்பு என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஊர் ஆலம்பாறை; பழந்தமிழகத்தில் முக்கிய துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்துள்ளது. இந்த ஊர், இடைக்கழிநாடு என, சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலம்பாறையில், 17-ம் நூற்றாண்டில் முகலாயர்கள் கோட்டை கட்டினர். செங்கற்களாலும், சுண்ணாம்பாலும் இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. 15 ஏக்கர் பரப்பில் சதுர வடிவில் உள்ளது. முகலாயர்களின் கோட்டை, சார்மினார், செளலானா அரண்மனை போன்றவற்றில் இருப்பதைப் போல, கண்காணிப்பு மாடங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

நவாபுகளின் ஆட்சிக்காலத்தில், துறைமுக நகராக இருந்துள்ளது. கப்பலில் வரும் பொருட்களை இறக்கவும், மீண்டும் கப்பலுக்கு பொருட்களை ஏற்றவும், படகுத் துறை அமைக்கப்பட்டு இருக்கிறது.

100 மீட்டர் நீளத்தில் அமைந்திருந்த படகுத் துறையின் எச்சத்தை, இப்போதும் காண முடியும். இதன் கட்டுமானப் பணிகள், முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில், தோஸ்த் அலி கான் என்பவரால் (Doste Ali Khan) 1736ல் தொடங்கி 1740ல் கட்டி முடிக்கப்பட்டது.

1750ம் ஆண்டு, முகலாயர்களுக்கு, பிரான்ஸ் தளபதி டியூப்ளஸ் படை உதவி செய்தார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில், சுபேதார் பர்ஜங் என்பவர், பிரஞ்சுக்காரர்களுக்கு ஆலம்பாறை கோட்டையை பரிசாக அளித்தார்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதிகள், பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டவையாக இருந்தது. ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆதிக்கப்போட்டி ஏற்பட்டது. போரில் பிரெஞ்சுக்காரர்களை வீழ்த்திய ஆங்கிலேயர்கள், ஆலம்பாறை கோட்டையைக் கைப்பற்றினர்.

இக்கோட்டையின் சில பகுதிகள், முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்டது. கடந்த 2002ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, கோட்டையின் பெரும்பகுதி சேதமடைந்தது.

18-ம் நூற்றாண்டில், கம்பீரமாக இருந்த இக்கோட்டை, தற்போது பொலிவிழந்து கிடந்தாலும், பலரும் கண்டு வியக்கும் நிலையில் உள்ளது. இங்கு நடந்த அகழ்வாராய்ச்சியில், முகலாயர் காலத்திய நாணயங்கள், பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த புகழ்மிக்க கோட்டை விரைவில், சீரமைக்கப்பட்டு விரைவில்  பொதுமக்களின் பார்வைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.