மதுரை:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, நேற்று முதல் விடிய விடிய பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தவர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தார்கள். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரியும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  மக்கள் பேரணியாக சென்று இன்று காலை, வாடிப்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு பிரிவினர் அலங்காநல்லூரில் உள்ள கேட்கடை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டவர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

 

 

இந்த நிலையில், அங்கு வந்த  மாவட்ட கண்காணிப்பாளர்  விஜயேந்திர பிதரி, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், “ கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். அமைதியான முறையில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தால்  காவல்துறையினர்  முழு ஒத்துழைப்பு தருவார்கள்” என்றார்.

ஆனால், அவரது ஆலோசனையை ஏற்க மறுத்த மக்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதட்ட நிலை அதிகரித்துள்ளது.