ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி  நேற்று காலை முதல் போராட்டம் நடத்தியவர்களை இன்று காலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்ட இளைஞர்கள் அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு, ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 22  மணி நேரத்திற்கு மேலாக இளைஞர்களின் இந்த போராட்டம் தொடர்கிறது. உள்ளூர் மக்களும் ஆதரவு தந்து இளைஞர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று அதிகாலையில் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்காமல் அவர்களை போலீஸ் சுற்றி வளைத்தது. வாடிப்பட்டி வட்டாட்சியர் இங்கு வந்து போராட்டக்காராக்ளை உடனடியாக கலைந்து செல்லுமாற எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார்.ஆனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாக துக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

பெண்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். அப்போது பீட்டாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மக்கள் முழக்கமிட்டனர். இதனைத் தொடந்து  பேருந்துகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து 22 மணி போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் “போராட்டம் தொடரும்” என்று அங்கு கூடியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.