லப்புழை

கேரள பெண்களுக்கு 5 ஆயிரம் இலவச மாதவிலக்கு கோப்பை அளிக்க ஆலப்புழை நகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெண்கள் பொதுவாக மாத விலக்கு நேரத்தில் துணி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவான நாப்கின்களை உபயோகப்படுத்தி வருகின்றனர். அதற்கான மற்றொரு உபகரணம் மாதவிலக்கு கோப்பை ஆகும். இந்த கோப்பையை பெண் உறுப்பில் பொருத்திக் கொள்வதால் மாதவிலக்கு நேரத்தில் வெளிப்படும் இரத்தம் உள்ளிட்ட திரவங்கள் இதில் சேமிக்கப்படும். இதை சுத்தம் செய்து மீண்டும் உபயோகிக்க முடியும்.

கடந்த வருட கேரள வெள்ளத்தின் போது அமைக்கப்பட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கி இருந்தனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய சானிடரி நாப்கின் நிறைய சேர்ந்தது. அந்த குப்பைகளை தற்போது எரிப்பதா அல்லது ஏற்கனவே டன் கணக்கில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளுடன் இணைப்பதா என ஆலப்புழை நகராட்சி குழப்பத்தில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் இதற்கு மாற்று வழி காண கேரள அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி நேற்று முன் தினம் ஆலப்புழையில் ”திங்கள் மாதவிலக்கு கோப்பை வழங்கும் திட்டம்” தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மகளிருக்கு 5000 கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. இது குறித்து ஆலப்புழா நகராட்சி ஆணையர் ஜகாங்கீர், “நங்கள் முதலில் துணி நாப்கின்கள் வழங்க திட்டமிட்டோம். ஆனால் வருடத்துக்கு ஆறு மாதத்துக்கு மேல் மழை பெய்யும் கேரளா போன்ற மாநிலத்தில் இந்த துணி நாப்கின்களை காய வைப்பது கடினம்.

இதனால் நாங்கள் மாதவிலக்கு கோப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கினோம். இந்த கோப்பைகள் ஆன்லைன் மூலமாகவே பெரும்பாலும் வாங்கப்படுகின்றன. அதனால் நாங்கள் இந்துஸ்தான் லேடக்ஸ் நிறுவனத்துடன் பேசி இந்த கோப்பைகளை உருவாக்கினோம். இதற்கான நிதி உதவியை கோலா இந்தியா லிமிடெட் நிறுவனம் அளித்துள்ளது. இந்த கோப்பைகளை பெண்கள் ஆலப்புழை நகராட்சி அலுவலகம் மற்றும் திருமணப் பதிவு அலுவலகங்களில் இலவசமாக பெறலாம். இவை உபயோகிப்பது குறித்து மகளிர் நல ஆலோசகர்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

சராசரியாக ஒரு பெண் ஒரு வருடத்துக்கு 160 நாப்கின்களை உபயோகிப்பார். ஆனால் ஒரு மாதவிலக்கு கோப்பையை குறைந்தது 5 அல்லது ஆறு வருடங்களுக்கு பயன்படுத்த முடியும். அதாவது இதனால் 780 நாப்கின்களை மிச்சம் செய்யலாம். அது மட்டுமின்றி அவற்றால் உண்டாகும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் செலவும் மிஞ்சும். வியாபாரம் காரணமாகவே நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கோப்பைகள் தயாரிபதில்லை” என தெரிவித்துள்ளார்.